
ஏன் வருகிறது என்று கேட்டதற்கு ‘எதிரெதிர் மேகக்கூட்டங்களிலிருந்து பாண்டவர்களும், கௌரவர்களும் சண்டயிட்டுக்கொள்வதாகவும், அவர்கள் பிரயோகிக்கும் அஸ்திரங்கள் ஒன்றோடொன்று மோதுவதால் இடி தோன்றுவதாகவும், மேலும் அர்ஜுனனின் அஸ்திரத்திற்கு பலம் அதிகம் என்பதால் அது மோதும்போது மின்னல் தோன்றுவதாகவும்’ கூறுவார், சமகாலத்தில் வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை தூர்தர்ஷனில் மகாபாரதம் பார்த்துக்கொண்டிருந்தமையால் அவர் சொன்னதை அப்படியே நம்பினதோடு மட்டுமின்றி, பள்ளியில் சக நண்பர்களிடம் “இடி மின்னல் ஏன் வருதுன்னு உங்களுக்கு தெரியுமாடா?” என்று கேள்வி கேட்டு தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறேன், இப்போதும் மழையை பார்க்கும்போது மேகங்கள் சண்டயிட்டுக்கொள்வதைப்போல் கற்பனை வந்துபோகும், ஆனால் அதில் எவரேனும் ஒருவர் வெல்லும்முன் மழை நின்றுவிடுவதென்னவோ நிதர்சனம், அதுமட்டுமல்ல, மழை வரும்போது கணக்கு நோட்டின் நடுப்பக்கத்தை கிழித்து கத்திக்கப்பல் விட்டது, “கன மழையால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை” என்ற பண்பலை செய்தியைக்கேட்டு துள்ளிக்குதித்தது, ஆலங்கட்டி மழையால் வீட்டின் ஓடு உடைகிறதா என்று அப்பா, நடு வீட்டில் நின்று மேலேயே பார்த்துக்கொண்டிருக்கையில் அதைக்கண்டுகொள்ளாமல் வெளியே ஐஸ் கட்டி எடுப்பதில் தங்கையுடன் போட்டி போட்டது, மழைக்குப்பின் தேங்கியிருக்கும் நீருக்கு அணைகட்டி விளையாடியது, அடாத மழையில் விடாமல் கிரிக்கெட் விளையாடி வீட்டில் உதை வாங்கியது, இன்னும் ஏராளமான சிறு சிறு மகிழ்ச்சியான தருணங்களை மழை விட்டுச்சென்றுள்ளதென்னவோ உண்மை, சிலர் “ முன்னாடியே தெரிஞ்சிருந்தா கொடைய கையோட எடுத்திட்டு வந்திருப்பேன்”, “இனி ரோட்ல நடக்கவே முடியாது பாஸு”, “இந்த மழைக்கும் கரண்டுக்கும் என்ன சண்டையோ”, “அச்சச்சோ! மொட்ட மாடில காலைல காயவச்ச வடகம் வீணாப்போயிருக்கும்”, “சாக்கடயெல்லாம் நெரம்பி ரோட்ல ஓடுதுங்க”, என்று தங்களது மறதிக்கும், அரசின் அலட்சியத்திற்க்கும் ஏதுமறியா மழையை திட்டுவதை பார்த்து நகைத்திருக்கிறேன், “அவுக சொன்னா என்ன, நமக்கு நீ பொலிஞ்சு தள்ளு ராஜா” என்று ஊக்கப்படுத்துவேன், இவ்வாறு மழை தனது வருகையை உணர்த்துவதோடு மட்டுமின்றி, பொழிந்து ஓய்ந்த சில நாட்களுக்கும் நினைவுகொள்ள வைக்கும், மழையில் நனைவதும், குடையின்றி மழையால் நனையவைக்கப்படுவதும், வாழ்வை ரசித்து வாழும் பலர்க்கும் மகிழ்வைத்தரும் விஷயமாகும், காலநிலை சுழற்சியின் ஆதாரமான மழை என்னும் திரவப்பூவை ஆராதிப்போம், தொடர்ந்து நனைவோம்.
டிஸ்கி: ஒரு முறை மழைத்தூறல்கள் விழுகையில் சென்னை to மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் பயணித்துக்கொண்டிருந்தேன், விரட்டிவந்த அடைமழை "சரி போ, மீண்டும் சந்திப்போம்" என்பது போல திடீரென நின்றதை உணர்ந்து பைக்கை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு நான் பார்த்த காட்சி அற்புதமானது, நான் நிற்கும் இடத்தில் மழையில்லை, ஆனால் ஐந்தே மீட்டரில் மழை கொட்டிக்கொண்டிருந்தது, மீண்டும் ஒருமுறை உணர்த்தியது "இயற்கை அற்புதமானதென்று".,

0 கருத்துக்கள்:
Post a Comment