Monday, April 25, 2011

பிரிந்துபோன மனைவியின் மரணம்

   பூமியில் ஓர் உயிரினமாய்த் தோன்றி ஆறாவது அறிவால் இன்று பூமிப்பந்தையே தனது கட்டுக்குள் வைத்திருக்கும் மனித இனத்தால் மரணம் என்னும் இயற்கை நியதியை இன்னும் விஞ்சமுடியவில்லை, மானுட வாழ்வு எவ்வளவு அற்பமானது என்பதை மரணம் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது, ஒவ்வொரு முறை ஊருக்குச்செல்லும்போதும் சிலர் மரணித்த செய்தி கேட்டு அவர்களுடனான சில நினைவுகள் கண்முன்னே வந்துபோகும், இன்று மரணத்தைப்பற்றிய எண்ணங்கள் மேலோங்க எனது நிறுவனத்தில் பணிபுரியும் சக ஊழியர் ஒருவரின் மனைவி மரணித்த நிகழ்வே காரணம், அதைப்பற்றி உங்களுடன் பகிரவே இந்த பதிவு.
      நண்பர் (வயது 38) பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து வந்து வளைகுடாவில் பணிபுரிபவர், அவரது மனைவியுடன் (வயது 35) ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக 5 வருடங்களுக்கு முன்பு ஒரே மகளை தன் பாதுகாப்பில் வளர்க்க சம்மதித்து சட்ட ரீதியாக விவாகரத்து பெற்றார், பிறகு மணிலாவில் உள்ள இரவு விடுதியொன்றில் பகுதி நேர நடனமாடும் வேலையில் சேர்ந்தார், மகள் வளர வளர அவரது பொருளாதாரத்தேவைகளும் அதிகமானதால் சவுதிக்கு வர நேர்ந்தது, இங்கும் இதுவரை அவர் தன்னுள் மறைந்திருக்கும் சோகத்தை யாரிடமும் வெளிக்காட்டிக்கொண்டதே இல்லை, அவ்வப்போது நடனமாடியும், நகைச்சுவையாய் பேசியும் சிறு சிறு மகிழ்ச்சிகளில் வேலைப்பளுவை மறக்கும் சராசரி தொழிலாளிகளின் ஹீரோவாகவே இருந்தார், அவரைச்சுற்றியிருப்பவர்கள் எப்பொழுதும் மகிழ்வுடன் இருப்பதைப் பலமுறை பார்த்திருக்கிறேன், 
கடந்த வியாழன் காலையும் அப்படியே தொடங்கியது, காலை 10 மணிக்கு வந்த தொலைபேசி அழைப்பில் அவரது மனைவி இறந்ததாக வந்த துயரச்செய்தி கேட்டு துக்கத்தில் அழுத நண்பரது முகத்தைக் காண இயலவில்லை, நமக்கு நெருக்கமானவர் வாழ்வின் ஒரு கட்டத்தில் பிரிந்துவிட்டாலும் அவர் இறந்தபின், பழகிக்கழித்த காலங்களும், இதயத்தின் இடுக்குகளில் இன்னமும் மிச்சமிருக்கும் அவரது நினைவுகளும், பிரிவுக்குப்பிறகு நிகழ்ந்த சில தோல்வியடைந்த சந்திப்புக்களும், கருப்புவெள்ளை காட்சிகளாய் வந்து நம்மை மேலும் மீளாத்துயரில் ஆழ்த்துவது இயற்கை, அதற்க்கு நண்பரும் விதிவிலக்கல்ல, ஆறுதல் சொல்கையில் அவரது மனதில் அலுத்திக்கொண்டிருந்த சில நிகழ்வுகளை எங்களுடன் பகிர்ந்தார், அப்பா! என்னை வழிநடத்த உங்களின் சில நற்பண்புகளை அம்மா அடிக்கடி சிலாகிப்பார் என்று என் மகள் சொல்லியிருக்கிறாள், என்னைப்பிரிந்தவுடன் அவள் நினைத்திருந்தால் வேறொரு திருமணம் செய்திருக்கலாம், ஆனால் செய்யவில்லை, ஏனோ! எனக்கும் அந்த எண்ணம் வரவில்லை, எப்பொழுதும் இல்லாமல் கடந்த ஆண்டு திருமண நாளன்று தொலைபேசியில் வாழ்த்தினாள் அப்போதுகூட கெட்ட கனவை நினைத்துப்பார்க்க எனக்கு நேரமில்லை என்று அழைப்பைத் துண்டித்தேன், என்னை விட்டு பிரிந்தாலும் யாரிடமும் என்னைப்பற்றி அவள் அவதூறாகச் சொன்னதில்லை, தெருவில் இருவரும் எதிரெதிரே கடந்து சென்ற தருணங்கள் வந்ததுண்டு அப்போது கூட அவள் என்னை அசட்டை செய்ததில்லை”, என்று பிரிவுக்குப்பிறகு தன் மனைவியின் நடப்பு குறித்து சொல்லி அவர் அழுகையில் என் கண்களும் தானாகவே கலங்கியது, ஆறுதலுடன் இறந்தவரின் இறுதிச்சடங்கிற்கு எங்களால் இயன்ற பங்களிப்பை அனைவரும் கொடுத்து உதவினோம்.
       இந்த நிகழ்வு எனக்குள் பல்வேறு கேள்விகளை கேட்கவைத்தது, அனைவரின் இதயமும் ஒன்றுதான், ஆனால் அதில் நீரின் மேற்பரப்பில் விரவி ஒளி புகாமல் தடுக்கும் பாசியைப்போன்று கோபம், பிடிவாதம், அகந்தை, ஆகியவை பரஸ்பர அன்பை நுழையவிடாமல் தடுக்கிறது, கோபத்தால் பிரிகின்றவர்களை, பிடிவாதமும், அகந்தையும் மீண்டும் இணைய விடுவதேயில்லை, பிரிந்த உறவுகள் இணையவும், இனிமையான நினைவுகளை அசைபோடவும் யாரும் இறக்கத்தேவயில்லை, அவரவர் நிலையிலிருந்து கொஞ்சம் இறங்கிவந்தாலே போதும், என்று உணர்த்தியது.

இறந்தவரின் ஆத்மா சாந்தியடையுமாறு பிராத்திப்போம்

குறிப்பு: ஒருவர் வாழ்வை நெறிப்படுத்த ஆயிரம் உபதேசங்கள், நற்ப்பண்புகளை வளர்க்கும் புத்தகங்கள் இவைகளைக்காட்டிலும், சக மனிதரின் வாழ்வே சிறந்த எடுத்துக்காட்டாக அமையும், என்கிற எண்ணத்தில் நண்பரின் அனுமதியுடன் பதிவிடப்பட்டுள்ளது.
 

Share/Bookmark

6 comments:

  1. "அனைவரின் இதயமும் ஒன்றுதான், ஆனால் அதில் நீரின் மேற்பரப்பில் விரவி ஒளி புகாமல் தடுக்கும் பாசியைப்போன்று கோபம், பிடிவாதம், அகந்தை, ஆகியவை பரஸ்பர அன்பை நுழையவிடாமல் தடுக்கிறது, கோபத்தால் பிரிகின்றவர்களை, பிடிவாதமும், அகந்தையும் மீண்டும் இணைய விடுவதேயில்லை, பிரிந்த உறவுகள் இணையவும், இனிமையான நினைவுகளை அசைபோடவும் யாரும் இறக்கத்தேவயில்லை, அவரவர் நிலையிலிருந்து கொஞ்சம் இறங்கிவந்தாலே போதும்"


    உண்மையான வார்த்தைகள் ஆனால் அடுத்தவர் உயிருடன் இருக்கும் வரை நாம் அதை செயல் படுத்துவதில்லை

    ReplyDelete
  2. சரியாகச் சொன்னீர்கள் மணி, அருகிலிருப்பவரை நேசிக்கக் கற்றுக்கொண்டால், தொலைவில் பிரிந்து வாட வேண்டிய அவசியம் இல்லை, "உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி"

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. நண்பரே
    நான் எங்கோ படித்தது தற்போது
    நினைவுக்கு வருகிறது,“பல மனிதா்கள் வாழ்வு முடியும் தருவாயில் தான் தான் இன்னமும் வாழவே தொடங்கவில்லை
    என்பதனை உணா்கிறாா்கள்”
    -தங்களது பதிவு சிந்தனைக்கானது.அருமை

    ReplyDelete
  5. வணக்கம் நண்பா, வாழ்வின் பல்வேறு கோணங்களை மேலும் அலசுவோம், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜீவன்.,

    ReplyDelete
  6. உண்மையான வார்த்தைகள் ஆனால் அடுத்தவர் உயிருடன் இருக்கும் வரை நாம் அதை செயல் படுத்துவதில்லை

    ReplyDelete